Read in English

கீதாச்சாரியன் கீதையில்

''ஜாதஸ்ய ஹி த்4ருவோ ம்ருத்யுர்த்4ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச''

பிறந்தவன் இறப்பதும், இறந்தவன்பிறப்பதும் உறுதி என்று கூறியுள்ளார். பொதுவாக இது இன்னும் முக்தியடையாதவர்களைக் குறித்து பேசும் பேச்சாகும். ஆசை இருக்கும் பரியந்தம் பிறப்பதும், இறப்பதும் இயல்பு. ஆனால் வேறொரு சுலோகத்தில்

மன்மனா ப4வ மத்34க்தோ மத்3யாஜி3யாஜி மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸிமே

எவனொருவன் 'என்பால் மனம் வைத்து என் பக்தனாய், என்னையே வணங்கி பூஜிப்பவன், என்னையே அடைவான்' என்று சத்தியச் சொரூபியான கண்ணன் சத்தியம் செய்தும் கீதையில் கூறியுள்ளார். நாள் தோறும் இரவும், பகலும் எழுந்திருக்கும் போதும்,உட்காரும் போதும், நடக்கும் போதும், உறங்கும் போதும் தைல தாரயைப்போல் ஸதா பகவானின் சிந்தனையிலே இருந்து கீதையின் தத்துவப்படி வாழ்வாங்கு வாழ்ந்து பக்தி நெறியைப் பரப்பியவரை ஸ்ரீமந் நாராயணன்ஏற்றுக் கொண்டு தம் திருவடிகளில் இணைத்துக் கொண்ட தால் மரணமிலாப் பெருவாழ்வினை எய்திய 'மதுரையின்ஜோதி' எனப் போற்றப்படுபவர் ' ஸ்ரீமந் நடனகோபால நாயகிஸ்வாமிகள்'. அவருடைய திவ்ய வரலாற்றை நாமும் படித்துக் குருவருளும், திருவருளும்பெற்று உய்வோமாக

பெரியாழ்வாரால், ஸ்ரீமந் நாராயணனே பரத்துவமென நிர்ணயம் செய்யப்பட்ட நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியில், பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸெளராஷ்ட்ர விப்ரகுல ஜாபாலி கோத்திரத்தில்,சின்னக்கொண்டா ஸ்ரீ ரெங்கய்யருக்கும்-- ஸ்ரீமதி லக்ஷிமி அம்மையாருக்கும் கருவில் திருவமைந்த திருக்குமாரனாக (ஸெளராஷ்ட்ர விஜயாப்தம் 531 ல் ) கி.பி. 1843 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தமிழ் சோபகிருது மார்கழி மாதம் 22 ஆம் தேதி வியாழக் கிழமை மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் அவதரித்தார். பெற்றோர் இவருக்கு 'ராம்பத்ரன்' என திருநாமம் சூட்டினர். பால பருவம் முதல் உலக நாட்டமின்றி கல்வியிலும், உத்தியோகத்திலும்,குலத் தொழிலாகிய நெசவுத் தொழிலிலும் பற்றின்றி,இளமையிலேயே இல்லறந் துறந்து, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேர்பின்புறமுள்ள குகையில் 12 ஆண்டுகள் அருந்தவம் புரிந்தார்.

முருகப் பெருமானின் அருளால் பரமக்குடியில் ஸ்ரீ நாகலிங்க அடிகளை குருவாகக் கொண்டு, அஷ்டாங்க யோகம் பயின்று பல ஆண்டுகள் பாடுபட்டு அடைய வேண்டிய சித்திகளை பதினெட்டே நாட்களில் கைவரப் பெற்று 'சதானந்த சித்தர்' எனும் திருநாமம் பெற்றார். பரமகுடியிலிருந்து திரும்பி வருகையில் சிவகங்கை சமஸ்தான மன்னர் வரவேற்று உபசரித்தார்.மூவித ஆசைகளில் பெண்ணாசை பொல்லாதது அது தவ விரதம் உடையவர்களையும் தத்தளிக்கச் செய்யும். ஆகையால் சதானந்த சித்தராகிய சுவாமிகளின் மன உறுதியைச் சோதிக்க நினைத்த மன்னர் சிறந்த அழகுடைய இளம் மங்கையை சுவாமிகள் தங்கியிருக்கும் அறைக்குள் அனுப்பினார். இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான் என்பதை பகவான் கண்ணன்

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட2ம் ஸமுத்ரமாப: ப்ரவிசந்தி யத்3வத்
தத்3வத் காமா யம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திமாப்னோதி ந காமகாமீ

வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கடலில் சென்றடங்குவது போல் எம்முனிவன்பால் ஆசைகளனைத்தும் சென்றடங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான். ஆசையுள்ளான் சாந்தியடையான் என்று கீதையில் கூறியுள்ளபடி சுவாமிகள் அம் மங்கையை சக்தியின் சொரூபமாகக் கண்டார்.

சுவாமிகளின் பெருமையை உலகத்தோர்க்கு உணர்த்த எண்ணிய இறைவன் சுவாமிகளை மீண்டும் ஒரு சோதனைக்கு உட்படுத்தும் எண்ணத்தை மன்னரின் மனதில் உண்டாக்கினார் போலும். பல நாட்கள் சமாதியில் இருக்க வல்லமை பெற்ற சுவாமிகளை மன்னரின் கட்டளைப் படியும் சுவாமிகளிள் ஒப்புதலுடன் ஒரு பாதாள அறையில் அமரச் செய்து மேல் பாகம் கட்டிடம் கட்டிப் பூசப்பட்டு காவலாளிகள் காவல் காத்தனர். பாதாள அறையில் ஒரு மண்டலம் 40 நாட்கள் கழிந்தன. பாதாள அறையின் மேல் பாகத்தில் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை காவலாளிகள் மன்னரிடம் செய்தியைக் கூறினர் அதே சமயம் சிலர் வந்து மதுரையை நோக்கி சுவாமிகள் நடந்து சென்று கொண்டிருப்பதாக கூறினர். மன்னர் பாதாள அறைக்கு வந்து பார்த்த பொழுது சுவாமிகள் இல்லாததைக் கண்டதுடன் சுவாமிகள் தம் யோக வலிமையினால் வெளியேறிருப்பதை அறிந்து வியப்படைந்தார். சுவாமிகள் மதுரைச் சாலையில் வைகைக் கரையில் உள்ள ' விடின் தோப்பு' என்னும் தோட்டத்தில் களைப்பால் உறங்கி இருந்த போது சூரிய ஒளி படாமல் இருக்க ஒரு நாகப் பாம்பு படமெடுத்து இருந்தது என்பதை சீடர்கள் கூறி இருக்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளால் சுவாமிகளின் புகழ் பரவின.

சில நாட்கள் மதுரையில் தங்கியபின் சீடர்களுடன் தென் திசை பாதயாத்திரை செல்கையில் சில கொள்ளையர்கள் சுவாமிகளிடம் வழிப்பறி செய்ய எண்ணி சீடர்களை தாக்கிய பொழுது சுவாமிகள் தெருவில் தரையிலிருந்த மண்ணை எடுத்து மந்திரம் சொல்லி திருடர்கள் மீது தூவியவுடன் திருடர்கள் கண் பார்வை இழந்தனர். திருடர்கள் சுவாமிகளின் மகிமையை உணர்ந்து சுவாமிகளிடம் மன்னித்தருள வேண்டினர். சுவாமிகளும் அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறி மீண்டும் கண் பார்வையை மீட்டுத் தந்தார்.

தொடர்ந்து பாத யாத்திரை செல்கையில் நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த சிறந்த வைஷ்ணவ ஆசாரியரான வடபத்ராச்சாரியரால் ஈர்க்கப்பட்டு அவரையே ஸத் குருவாக ஏற்றுக்கொண்டார். வடபத்ராச்சாரியார் இவரை திருமால் பக்தியில் பிரேமை உண்டாக்கி பஞ்ச சம்ஸ்காரம் செய்து திருமண் காப்பிட்டு தூய வைஷ்ணவராக்கி 'நடனகோபால நாயகி ' ஸ்வாமிகள் எனும் தாஸ்ய நாமமிட்டார்.(பிற்காலத்தில் நம் சுவாமிகள் அகத்தில் மட்டும் பெண்ணாக எண்ணாமல் புறத்தே பெண்களுக்குரிய நடை, உடை, பாவனைகளிலும் பெண்ணைப் போலவே திகழ்வார் என்பதை முன் கூட்டியே உணர்ந்தவராக 'நாயகி ' என்பதையும் தாஸ்ய நாமத்துடன் தமது குரு சேர்த்திருப்பார் போலும்)

ஜல்லெரை ஜல்லெரெ மொந்நூ தூ நமம்
மெல்லெரெ ஹரிபதா3ல் தெ4ல்லெரெ ஜிவ்லுவாய்'

என்ற பாடலில் கடைசியில்

வடபத்ராசார்யு மொகொ நாவ்
நடனகோ3பால நாயகிமென் க4லெஸ்

வடபத்திர அரையர் அடியேனுக்கு நடனகோபால நாயகி என்று நாமகரணம் செய்தார் என்று பாடியுள்ளார்.

திருமழிசை ஆழ்வார் முதலில் சிவபக்தராக இருந்து பின் விஷ்ணு பக்தரானது போல் நம் சுவாமிகள் சிவராஜயோகியாயிருந்து மாறி மாதவ ராஜ யோகியானார். சில காலம் ஆழ்வார் திருநகரியில் இருந்து ஸத் குருவாகிய வடபத்ராரியரிடம் திருமந்திரம், த்3வயம், சரம சுலோகம், தமிழ்வேதமான நாலாயிர தி3வ்ய ப்ரபந்தம் ஆகியவற்றை உபதேசமாகப் பெற்று, நன்கு கற்று குருவின் திருவருளால் வீர வைணவராகி ஹரியின் திருவருளையும் தரிசனமும் பெற்றார்

தி3வ்யம் தி3வ்யம் தி3வ்யம் தி3வ்யம் தி3வ்யம் தி>3வ்யம் தே>3வு நமமுஸ் த4ரீர்

வடபத்ரார்யுநு மொகொ மோக்ஷிவாடு நமமுஸ் மெனி வசிரியாஸ் திஸோஸ்

நடனகோ3பாலுக் க3வெஸ் ஸேவொ தி3யெஸ் அவி
நமம்தெ4ல்லி நிஜம் வசேஸி

என்ற பாடலில் மோட்சத்திற்கு வழி பகவானுடைய திவ்ய நாமங்களே என்று தமது குரு கூறியுள்ளார். அப்படியே நடனகோபாலனைப் பாடினேன் ஸ்ரீ ஹரி வந்து தமக்கு தரிசனம் கொடுத்தார். இறைவன் நாமத்தைப் பிடித்துக் கொண்டு உண்மை கூறினேன் என்று பாடியுள்ளார்.

தமது ஸத் குருவுக்குத் தொண்டு முடிந்து ஆழ்வார் திருநகரியிலிருந்து திரும்பும் வழியில்,ஆண்டாள் பிராட்டியாரின் திருவவதாரத் தலமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளின் ஸந்நிதானத்தில் ஸேவித்து நின்றார். ஆண்டாளின் நாயகி பக்தி யுணர்வும்,உணர்ச்சியும் காதல் வேகமும் அவர் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டது.

திருப்பதி யாத்திரை செல்லும் பொழுது திருபுவனம் என்னும் ஊரில் குழந்தைச் செல்வத்திற்காக ஏங்கிய தம்பதியர்க்கு நம் சுவாமிகளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது அகமகிழ்ந்த அத்தம்பதியர் சுவாமிகள் திரும்பி வருகையில் புடவை,ரவிக்கை,மஞ்சள்,குங்குமம், வளையல், சலங்கை ஆகியவற்றை அன்புடன் அர்ப்பணித்தனர். உள்ளத்தில் மட்டுமல்ல,தோற்றத்திலும் பெண்ணாய் மாறவேண்டும் என்பது திருமாலின் திருவருள் போலும் என்றெண்ணி சுவாமிகள் ஆபரணங்களைஅணிந்து கொண்டு,சேலையை உடுத்திக் கொண்டு , மஞ்சள் பூசிக் கொண்டு, நாயகியாக மாறினார். திருமாலின் நாயகியாகி திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளைஸேவித்து பாடியாடி வருவதைக் கண்ட ஸ்ரீஜீயர் சுவாமிகள் அவருக்கு ' நாயகி ' என்ற பட்டத்தை வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.**

**(ஆனால் நாயகி சுவாமிகளுடைய ஸெளராஷ்ட்ர மற்றும் தமிழக் கீர்த்தனைகளில்.எதிலும் ஸ்ரீரங்கம் ஜீயர் சுவாமிகள் தமக்கு 'நாயகி ' என்ற பட்டத்தை சூட்டியதாக குறிப்பிடவில்லை.).

இருப்பினும் தமது ஸத் குரு வடபத்ராச்சாரியார் அவர்களால் நாயகி என்ற பெயர் சூட்டப்பட்டது என்று சுவாமிகளே தமது பாடலில் குறிப்பிட்டுள்ளதால் அது பத்திரம் எழுதியது போலும், அப்பத்திரம் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கோயிலில் ஸ்ரீரங்கம் ஜீயர் அவர்களால் பதிவு செய்யப்பட்டது போலும் உள்ளது

சுவாமிகளின் வாழ்நாட்களில் பெரும். பகுதி மதுரையில் வசித்துள்ளார். தம் ஜீவனத்திற்கு வேண்டிய பொருட்களை உஞ்ச விருத்தி என்கின்ற முறையில் பெற்று வாழ்ந்தார்.சுவாமிகள்ஆஞ்ஜநேயரைப் போல் நைஷ்டிக பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். பள்ளிப் படிப்பு சொற்பமாக இருந்தாலும் சுவாமிகள் நாவில் கலைமகள் களிநடனம்புரிய ஒரு வரகவியாக இருந்தார் சுவாமிகள் தித்திக்கும் தீந்தமிழிலும், தீஞ்சுவை ஸெளராஷ்ட்ர பாஷையிலும் பல கீர்த்தனைகள்பாடி அல்லும் பகலும் இறைவன் சிந்தனையில் வாழ்ந்தார்.

தாய் மொழியாகிய ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல்களில் அறவுரை, அறிவுரை, மற்றும் வைணவத் தத்துவ பக்தி நெறி கூறுவனவாக அமைந்து உள்ளன. தமிழ் கீர்த்தனைகளில் நாயகி பா4வத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலை மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

சுவாமிகளுடைய. சீடர்கள், தங்களது ஸத் குருவாகிய ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை பல்லக்கில் மற்றும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டியில் அமர்த்தி ஊர்வலம் நிகழ்த்தி அவருடைய ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடிய சமயத்தில், தாம் முக்தியடையப் போகும் நாளை தம் சீடர்களிடம் குறிப்பால் தெரிவித்தார்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா கீதையில் உபதேசித்துள்ளபடி

ஸர்வத்3வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி3 நிருத்4ய ச
மூர்த்4ன்யாதா4யாத்மன: ப்ராணமாஸ்தி3தோ யோக3தா4ரணம்

ஓமித்யேகாக்ஷரம் ப்3ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன்
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாம் க3திம்

அதாவது ' பொறிவாயில் எல்லாவற்றையும் அடக்கி, மனதை ஹிருதயத்தில் நிறுத்தி, தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து, யோக தாரணையில் நிலைத்திருந்து, 'ஓம் ' என்கிற ஏகாக்ஷரமாகிய பிரம்ம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை ஸ்மரித்துக் கொண்டு, யார் உடலை நீத்துப் போகிறானோ அவன் பரம கதியைப் பெறுகிறான் '

தாம் முன்கூட்டியே அறிவித்திருந்தபடி தாம் முக்தியடையப் போகும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிப் புனித நாளுக்கு முன் அஷ்டமியன்று இரவு பகவான் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா கீதையில் உபதேசித்துள்ளபடி நாயகி சுவாமிகள் தியானத்தில் அமர்ந்து யோகதாரணையில் அன்ன ஆகாரமின்றி நவமியும், தசமியும் கழிந்தன. அது சமயம் சீடர்களும், பக்தர்களும் பகவந் நாம சங்கீர்த்தனைகளைப் பாடிக் கொண்டிருந்தனர். முக்கோடி ஏகாதசியாகிய ஸ்ரீ வைகுண்ட ஏகாதசிப் புனித நாளன்று 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் வியாழக் கிழமை கார்த்திகை நட்சத்திரத்தன்று பகல் 12 மணிக்கு சுவாமிகளின் தமையனார் மகன் ஹரி கிருஷ்ணய்யர் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தார். சங்கீர்த்தனையில் ஈடுபட்டிருந்த அனைவரும் அதுசமயம் 'ஹரி அவ்டி3யொ ' (ஹரி வந்துவிட்டார்) என்று கூறவும் நாயகி சுவாமிகளும் ஆகாயத்தை நோக்கி பகவான் ஹரியின் திவ்ய தரிசனத்தைக் மிக்க களிப்புடன் மனமும்,அகமும் குளிரக் கண்டு ஹரி வந்து விட்டார் என்று உரக்க கூவியபடி கல கல வென்று சிரித்தபடி சிரம் மேல் கரங்குவித்து வணங்கினார்.

கீதையில் ஹ்ருஷீகேசன்

ஜன்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்வத:
த்யக்த்வா தேஹம் புனர்ஜன்ம நைதி மாமேதி ஸ: அர்ஜுன

'அர்ஜுனா, எனது திவ்யப் பிறப்பையும், செயலையும் உள்ளபடி அறிபவன் உடலை நீத்து மறு பிறப்பெய்துவதில்லை என்னையே அடைகிறான்.'என்று கீதையில் கண்ணபிரான் கூறிய சத்திய வாக்குப்படியும் நாயகி சுவாமிகளின் பாட்டில்

ஸெணமவி ஸேவ தீ3 ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர் ஸெர)
ஸ்ரீலக்ஷிமி தே3விஸெர அவி மொகொ தூபொ3வ்லே

வெகு விரைவில் வந்து சேவை சாதித்து,சரீரத்திலிருந்து விடுவித்து உன்னோடு நான் சேர்ந்தால் தான் பிறந்திறந்ததினால் ஏற்பட்ட களைப்புத் தீரும், ஸ்ரீலக்ஷிமி தேவியோடு வந்து என்னை உன்னிடத்தில் அழைத்துக் கொள் என்று பரம பக்தரான ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஆசையின்படி திருமாலின்திவ்ய தரிசனம் பெற்று பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் உடலை நீத்து பகவானின் திருவடியில் கலந்தார்.

அவருடைய விருப்பப்படி ஆழ்வார்களாலும், நாயகி சுவாமிகளாலும் மங்களா சாஸனம் செய்யப்பட்ட மதுரையிலிருந்து அழகர் கோயில் செல்லும் வழியில் யானைமலை யோகநரசிம்மர் திருக்கோயில் சந்நிதிக்கெதிரில் காதக்கிணறு என்கின்ற நடன கோபாலபுரம் பகுதியில் சுவாமிகளுடைய திருமேனியை அமர்ந்த நிலையில் குழியில் இருத்தி அதன்மேல் சுவாமிகளின் குடும்பத்தாரால் பிருந்தாவன(சமாதி) கருவறை கட்டி முடிக்கப்பட்டது.

சில வருடங்களுக்குப் பின் சுவாமிகளின் இஷ்ட தெய்வமான வேணுகோபாலின் திருவுருவச் சிலையை வைத்து திருக்கோயில் கட்டி திரு சி.எம்.வி கிருஷ்ணமாச்சாரி அவர்கள் தலைமையில் (5--6--1941) குரு வாரத்தன்று வெகு சிறப்பாக ஸம்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. கள்ளழகர் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவிற்காக தம் ஆஸ்தானத்தை விட்டு மதுரைக்குச் செல்லும் பொழுதும் திரும்பிச் செல்லும் பொழுதும் தமது நாயகியாக ஊரை அலங்கரித்த உத்தமரான நடனகோபால நாயகிக்கு ஸேவை தந்து செல்கிறார்.

சுவாமிகள் அவதரித்ததும், முக்தி அடைந்ததும் மார்கழி மாதம், குருவாரம்¢ மற்றும் அவரது ஜன்ம தினமும், பிருந்தாவனத்திற்கு எழுந்தருளிய தினமும் மிருகசீர்ஷ நட்சத்திரமே என்னே அதிசயம்! இதிலிருந்து சுவாமிகளின் தெய்வீக ஆற்றல் நன்கு புலனாகிறது.

சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சுவாமிகளின் திருமேனியை வைத்த இடத்தின் மேல் வேணு கோபாலர் தெய்வ சிலைக்குப் பதிலாக சுவாமிகளின் திவ்ய உருவச் சிலை தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று பல சான்றோர்களின் அறிவுரைப்படி, 'ராணி சாரீஸ்' திரு ராணி.எஸ். சாந்தாராம் அவர்கள் தலைமையில் திருப்பணிக்குழு அமைத்து கோயிலை புதுப்பிக்கும் சமயம் வேணுகோபாலர் சிலையை அகற்றி நாயகி சுவாமிகளின் உருவச் சிலையை வைத்தும். கோயிலை விரிவுபடுத்தி புதிதாக கருவறை கட்டி கோபுரம் அமைத்து அகற்றப்பட்ட வேணுகோபாலர் திருவுருவச் சிலையுடன் ருக்மணி, சத்தியபாமா திருவுருவச் சிலைகளையும் பிரதிஷ்டை செய்து புது சந்நிதியை ஏற்படுத்தி ஸெளராஷ்ட்ர விஜயாப்தம் 686 க்கு தமிழ் வெகுதான்ய வருஷம் வைகாசி மாதம் 24 ஆம் தேதி( 7--6--1998) ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல்10-00மணிக்குள் கடகலக்னத்தில் வெகு சிறப்பாக (ஸம்ரோக்ஷணம்) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அருள்பாலித்து வரும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் பிருந்தாவன கோயிலுக்குச் சென்று வணங்கி குருவருளும் திருவருளும் பெற்று உய்வோமாக.


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube