ஒருபோதும் மறக்கேனென் றுறைத்தானே

   

ஸௌராஷ்ட்ரம் ராகம்
ஏக தாளம்

பல்லவி

ஒருபோதும் மறக்கேனென் றுறைத்தானே
உடலுயிரையும் கரைத்தானே [ஒரு]

அநுபல்லவி

திரமோ வெனக்கருதி யுறுதியிழந்தவராய்
தரை சாய்பொழுது அவன் கறவைகளை மேய்த்துக்கொண் [டொரு]

சரணங்கள்

சரமஸ்லோகமருளும் பரமபுருஷ திருக்
கரஞ்சிரம் உம்பர் வைத்து உறுதி திருவுள்ளமாய் [ஒரு]

பரமதயாபரனாய் உரலிற்கட்டுண்ட அரி
கரங்களுயரவெடுத் துறுதியுறுதியென் [றொரு

அரனயனையும்தரும் பரமபுருஷன் வாயால்
திரம் திரம் நம்புகளென்று கூறிக்கூறி [ஒரு]

இருவினையறுத்திடுந் திருவடியுடையவ
னிருகைநீட்டுமென்றவன் திருக்கைத்திரமாய்ப் போட் [டொரு]

உறியைமறந்தால் தெரிவையரையு மறப்பேனென்
றுறுதியாயுவந்தவன் முறுவல்வாயால் முத்தமிட் [டொரு]

இரவால்வந்துறுந் துயரத் திருமார்போடணைத்
தருள்செய்திடுந்தெய்வத் திருத்தழாய் மாலையைப் [போட்]

உறவுபொலியவவன் குறங்கின்மேலெமைக்கொண்
டரவிந்தமாநயனன் கரத்தாலெங்கண்ணீர் துடைத் [தொரு]

அருந்துமதரக்கனி பொருந்தக்கெஞ்சியே நம்பால்
சிரத்தால் வணங்கியவன் கரசரணம்பிடித் [தொரு]

பரவசமாயெல்லீரும் இருக்க ஸ்ரீகிருஷ்ணன் மகிழ்ந்
துருகும் மனத்தைக்கண்டுருகியுருகிநா [மொரு]

கருணைவடிவமதாய்முறுவல்வாய் ஹரி நம்
மருகினில் வந்துநின்று பெருகிய கிருபையோ [டொரு]

கரங்கள் சென் னிமிசைவைத்துருகும் தருணமறிந்
திரவும் பகலும் நம்பாலிருக்கத் திருவுள்ளமா [பொரு]

திங்களொளியிலெங்கள் செங்கைகளைக் கோர்த்துக் கொண்டு
மங்களமா யாடும்போதிலெங்களைச் சேர்ந்திடவந் [தொரு]

வந்துவந்தெங்களுடைய முந்தனைவியகலக்கோ
விந்தன் சிந்தைமகிழ்ந்தின்பந்தரும் இனிய சொற்களால் [ஒரு]

தினமும் விடாமலெங்கள் மனத்தையிழுத் துங்களை
அனந்தனறியநான் கனவிலும் வைத்தேனென் [றொரு]

வண்டுகள் சூழ்ந்திட உச்சிக்கொண்டை இலங்கிட மலர்
கொண்டுவந்தளித்துநாம் கண்டுகளித்திடநின் [றொரு]

அலர்மேல்மங்கையை வலமார்பில் வைத்தவனானென்
றகிலமறியநீ வீரலக்கண் விடுங்களென் [றொரு]

வடபத்ராரியர் தொழும் நடனகோபாலன் திகழ்
படங்களோராயிரமார் கொடைநிழல் சேவையைத்தந் [தொரு]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube